ஷா ஆலம், ஜூலை 6- தடுப்பூசியைப் பெறுவதற்காக தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்குச் செல்வோரின் வசதிக்காக சிலாங்கூர் அரசு 11 தடங்களில் இலவச ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நோக்கத்திற்காக சுபாங் ஜெயா மாநகர் மன்றம், கிள்ளான் நகராண்மைக் கழகம், காஜாங் நகராண்மைக் கழகம், கோல சிலாங்கூர் மாவட்ட மன்றம் ஆகிய ஊராட்சி மன்ற அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் அந்த பஸ் சேவைக்கான 11 வழித்தடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
குறிப்பிட்ட தினத்தில் தடுப்பூசி மையங்களுக்கு தடங்கலின்றி பொதுமக்கள் செல்வதை உறுதி செய்யும் நோக்கில் ஊராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பஸ் சேவையைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்குச் செல்ல விரும்புவோர் ஏப்பள் ஏப் ஸ்டோர் வாயிலாக எஸ்.டி.எஸ். ஸ்மார்ட் சிலாங்கூர் செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் வழித்தடங்கள் குறித்த விபங்களை தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்றார் அவர்.


