MEDIA STATEMENT

முகேஷ் சபாபதி உள்பட மூவருக்கு இங்கிலாந்தின் டயானா 2021 விருது

30 ஜூன் 2021, 4:29 AM
முகேஷ் சபாபதி உள்பட மூவருக்கு இங்கிலாந்தின் டயானா 2021 விருது

கோலாலம்பூர், ஜூன் 30- இங்கிலாந்தின் டயானா 2021 உயரிய விருதை மூன்று இளம் மலேசியர்கள் பெற்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளனர். முகேஷ் சபாபதி (வயது 23), சஹானா கவுர் (வயது 16), யி காங் சூ (வயது 22) ஆகியோரே அம்மூன்று சாதனையாளர்களாவர்.

இந்த விருதுக்காக உலகம் முழுவதுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 300 பேரில் இம்மூவரும் அடங்குவர். சமுதாய மற்றும் மனிதாபிமான பணிகளில் அவர்கள் வழங்கிய பங்களிப்புக்காக இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. நேற்று இயங்கலை வாயிலாக நடைபெற்ற நிகழ்வில் அவர்கள் இந்த விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

வேல்ஸ் இளவரசி டயானாவின் நினைவாக உருவாக்கப்பட்ட இந்த விருதை  டயானா அவார்டு எனப்படும் சமூக நல அமைப்பு சமூகப் பணிகளில் ஈடுபடும் இளையோருக்கு வழங்கி வருகிறது.

நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தி அதனை நிலைநிறுத்துவதற்கு முழு அர்ப்பணிப்பை வழங்கிய மற்றும் சமுதாய மற்றும் மனிதாபிமானப் பணிகளை ஆற்றியதற்காக அங்கீகாரம் வழங்கப்பட்ட 9 முதல் 25 வயதுக்குட்பட்ட இளையோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

தலைநகர், கார்டன் இண்டர்நேஷனல் பள்ளி மாணவியான சஹானா கவுர், மலேசிய இளைஞர் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் தலைவராக உள்ளதோடு இளம் தலைமுறையினரின் கருத்துக்கள் செவிமடுக்கப்படுவதற்கு ஏதுவாக சட்டங்கள் இயற்றப்படுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

கடல் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் கொண்ட முகேஷ், 2017இல் “புரோஜெக்ட் ஆசியான் ஹோப்“ திட்டத்தை கூட்டாக உருவாக்கினார். கடல் சார்ந்த பகுதிகளை புனரமைப்பதை இந்த திட்டம் அடிப்படையாக கொண்டுள்ளது.இத்திட்டம் தொடர்பில் இவ்வாண்டில் மட்டும் பத்து பள்ளிகளில் அவர் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டுள்ளார்.

சிறார் துன்புறுத்தல் தடுப்புச் சங்கத்தின் ஆலோசகராகவும் பயிற்றுநராகவும் சூ உள்ளார். துன்புறுத்தல் பகடிவதை மற்றும் குடும்ப உறவுகளில் ஏற்படும் பிரச்னை போன்றவற்றைக் களைவதில்  முக்கிய பங்கினை இவர் ஆற்றி வருகிறார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.