ஷா ஆலம், 28- உணவுக் கூடை திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 50,000 வெள்ளி மானியம் பூர்வக் குடியினர் உள்பட சரியான தரப்பினரை முறையாக சென்றடைவதை உறுதி செய்யும்படி மாநிலத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.
இந்த உதவித் திட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் மீது மட்டும் கவனம் செலுத்தி சமூகத்தின் மற்றப் பிரிவினரை கைவிட வேண்டாம் என்று சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பூர்வக்குடியினர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் வலியுறுத்தினார்.
பூர்வக்குடியினர் உள்ள தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் அச்சமூகத்திற்கு தேவையான உதவிகள் முறையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் சொன்னார்.
மாநில அரசின் கூடுதல் நிதி ஒதுக்கீடு வாயிலாக பலன் பெறுவதில் பூர்வக்குடியினர் தனித்து விடப்படப்படக் கூடாது என்றார் அவர்.
கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் கீழ் உணவுக் கூடைத் திட்டத்திற்காக மாநிலத்திலுள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கூடுதலாக ஐம்பதாயிரம் வழங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த 9ஆம் தேதி அறிவித்தார்.


