ஷா ஆலம், ஜூன் 27- பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்கு ஏதுவாக வர்த்தகத் துறையினர், அரசு சாரா அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் கோவிட்-19 தடுப்பூசிகளை சொந்தமாக கொள்முதல் செய்வதற்கு அனுமதிக்கும்படி அரசாங்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு உதவும் நோக்கில் சொந்தமாக தடுப்பூசிகளை வாங்குவதற்கு பல தரப்பினர் தயாராக உள்ளதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
இவ்விவகாரம் மீது அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கையின் வாயிலாக நோய்த் தொற்றிலிருந்து மக்களை விடுவிக்கும் முயற்சிக்கு அத்தரப்பினர் மறைமுக பங்கினை ஆற்றுகின்றனர் என்றார் அவர்.
தடுப்பூசித் திட்டத்தை விரைந்து கொள்வதில் அரசாங்கம் அடைந்த தோல்வி காரணமாக மக்கள் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்று அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.
தடுப்பூசியை விரைவாக பெற வேண்டுமானால் சொந்த செலவில் தனியார் துறையை அணுகி தடுப்பூசி பெறுங்கள் என்ற தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடினின் அறிக்கையை குணராஜ் கடுமையாகச் சாடினார்.


