ஷா ஆலம், ஜூன் 27- கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிலாங்கூரிலுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் தன்னார்வலர் அமைப்புகளை உருவாக்க மாநில ஆட்சிக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பொதுமக்கள் மத்தியில் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவது மற்றும் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையின் அமலாக்கத்தை உறுதி செய்வது போன்ற பணிகளில் அந்த தன்னார்வலர்கள் ஈடுபடுவர் என சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
நடப்பு நிலையை மக்களுக்கு உணர்த்துவதில் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றக்கூடிய தன்னார்வலர்கள் நமக்கு தேவை. நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி மட்டும் போதாது. மாறாக பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை என்றார் அவர்.
கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதாக கூறிய அவர், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பரிசோதனை இயக்கங்கள், சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளும் திட்டம், நோய்த் தாக்கம் அதிகம் உள்ள இடங்களில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது ஆகியவை அவற்றில் அடங்கும் என்றார்.


