ஷா ஆலம், ஜூன் 27- காஜாங் சட்டமன்றத் தொகுதியில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகம் பதிவான இடங்களை இலக்காக கொண்டு மீண்டும் பரிசோதனை இயக்கத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்று இத்தொகுதியில் நடைபெற்ற மூன்றாம் கட்ட கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தின் முடிவுகளை மதிப்பீடு செய்த பின்னர் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
உதாரணத்திற்கு குறிப்பிட்ட ஒரு இடத்தில் அதிகமானோருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று பீடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அப்பகுதி மக்கள் கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று அவர் விளக்கினார்.
நோய்த் தொற்று இருந்தும் அதற்கான அறிகுறி ஏதுமின்றி தங்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவோரை அடையாளம் காணும் நோக்கில் இந்த பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
இங்குள்ள ஸ்ரீ செம்பாக்கான மண்டபத்தில் நடைபெற்ற மூன்றாம் கட்ட கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான மூன்றாம் கட்ட கோவிட்-19 பரிசோதனை இயக்கம் கடந்த வாரம் சனிக்கிழமை தொடங்கியது. ஐந்து தொகுதிகளில் இதுவரை பரிசோதனை நடைபெற்ற வேளையில் நாளை ஞாயிற்றுக் கிழமை புக்கிட் அந்தாராபங்சா தொகுதியில் இவ்வியக்கம் மேற்கொள்ளப்படுகிறது.


