ஷா ஆலம், ஜூன் 27- கோவிட்-19 நோய்த் தொற்றின் மூன்றாம் கட்ட அலையை குறிப்பாக தொடர்ச்சியற்ற முறையில் ஆங்காங்கே திடீரென ஏற்படும் நேர்வுகளை கையாள மும்முனை அணுகுறை கையாளப்படுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் மற்றும் எப்.டி.டி.ஐ.எஸ். எனும் முறையின் கீழ் நோய்த் தொற்றை அடையாளம் காண்பது ஆகியவை அந்த மும்முனை அணுகுமுறையில் அடங்கும் என்று சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.
நோய்த் தொற்றைக் கண்டறிதல், சோதித்தல், அடையாளம் காணுதல், தனிமைப்படுத்துதல், ஆதரவளித்தல் மற்றும் தடுப்பூசி திட்டத்தை வலுப்படுத்துதல் ஆகிய அம்சங்களை இந்த எப்.டி.டி.ஐ.எஸ் வழிமுறை கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
நோய்த் எதிர்ப்பு குழுமத்தை உருவாக்குவதில் இந்த ஒவ்வொரு அணுகுமுறையும் ஆக்ககரமான பங்கினை ஆற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மூன்று அணுமுறைகளின் தொடர் நடவடிக்கைகள் இன்றி அரசாங்கம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்ய இயலாது. நோய்த் தொற்றுகள் அடையாளம் காணப்படாமல் போவதற்கு இதுவே காரணமாக அமைந்துள்ளது என்றார் அவர்.
இதில் கடைசி அணுகுமுறையாக விளங்கும் தடுப்பூசி, நோய்த் தொற்றைத் தடுக்கக்கூடிய தோட்டாவாக விளங்குகிறது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவல் மூன்று அணுகுமுறைகளும் முக்கியமாக விளங்குவதால் இதில் எது அதிகமுக்கியத்துவம் வாய்ந்தது என்று யாரும் விமர்சனம் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.


