ஷா ஆலம், ஜூன் 26- கோவிட்-19 நோய் தொற்றுப் பாதிப்பிலிருந்து மீண்டும் சுற்றுலா நடவடிக்கைளை தொடர்வதற்கு ஏதுவாக சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு சிலாங்கூர் அரசு இருபதாயிரம் வெள்ளி வரை உதவி நிதி வழங்க தயாராக உள்ளது.
சுற்றுலா தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டங்களை ஏற்பாடு செய்யும் அத்தொழில்துறை சார்ந்தவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படும் என்று சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் லீ லோய் சியான் கூறினார்.
இத்தகைய நடவடிகைகளின் வாயிலாக மாநிலத்தில் சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்ட முடியும் என நம்புகிறோம். இந்நோக்கத்திற்காக கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தின் கீழ் 10 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிதியுதவிக்கு அனைத்து சுற்றுலா துறையினரும் விண்ணப்பிக்கலாம். குறைவான செலவினத்தை சம்பந்தப்படுத்திய திட்டங்களுக்கு முழுமையாக நிதி வழங்கப்படும் என்றார் அவர்
“சுற்றுலாத் துறையை காப்பாற்றுவதற்கான வியூகங்கள்“ எனும் தலைப்பிலான விவாத நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இதனைக் கூறினார்.
தற்போது அமல்படுத்தப்படும் மரபு ரீதியான விளம்பர நடவடிக்கைகள் ஆக்ககரமான பலனைத் தராததால் இலக்கவியல் முறையில் சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள அத்துறை சார்ந்தவர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்நோக்கத்திற்காக மாநில அரசு வழங்கும் இலக்கவியல் பயிற்சி மற்றும் இணைய வர்த்தக பயிற்சி ஆகியவற்றில் பங்கேற்கும்படி சுற்றுலாத் துறையினரை அவர் வலியுறுத்தினார்.


