ஷா ஆலம், ஜூன் 25- சுபாங் ஜெயா, யு.எஸ்.ஜே. 14 பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் 659 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களில் 15 பேருக்கு நோய்த் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மெய் ஸி கூறினார். அந்த 15 பேரும் மேல் சிகிச்சைக்காக சுகாதார அமைச்சிடம் அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், டீம் சுபாங் ஜெயா ஏற்பாட்டில் ஆக்சிஜன் அளவை சோதனையிடும் கருவி, மருந்துகள் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய சுய பரிசோதனை கருவி அவர்களுக்கு வழங்கப்பட்டது என்றார் அவர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவர் என்பதால் அவர்களுக்கு உதவும் பொருட்டு உணவுக் கூடைகளும் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
யு.எஸ்.ஜே. பகுதியி உள்ள உணவகம் ஒன்றில் இருவருக்கு நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியை இலக்காக கொண்டு கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.


