ஷா ஆலம், ஜூன் 24- கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக இன்று 8 வயது சிறுவன் உள்பட 84 பேர் உயிரிழந்தனர்.
ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அந்த சிறுவன் ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் காலமானதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இதனிடையே, ஒருவகை நரம்பு மற்றும் தசை நோயினால் பீடிக்கப்பட்ட 16 வயது இளைஞரும் கோவிட்-19 நோய் காரணமாக சுங்கை பூலோ மருத்துவமனையில் உயிரிழந்த தாக அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இன்று பலியானவர்களில் 12 பேர் 24 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் வெளிநாட்டவர் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர்களில் எண்மர் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், தைராய்டு, வலிப்பு போன்ற கடும் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த வேளையில் எஞ்சிய நால்வர் எந்த நோய்ப் பின்னணியையும் கொண்டிருக்கவில்லை என்றார் அவர்.
சிலாங்கூரில் மிக அதிகமாக அதாவது 32 பேர் மரணமடைந்தனர். கோலாலம்பூர் மற்றும் நெகிரி செம்பிலானில் தலா 10 பேரும் கிளந்தானில் எண்மரும் ஜொகூரில் எழுவரும் கெடாவில் அறுவரும் இந்நோய்க்கு பலியாகினர்.


