கோலாலம்பூர், ஜூன் 24- கோவிட்-19 தடுப்பூசிகளை தொலைபேசி வழி விற்பனை செய்து வந்ததாக நம்பப்படும் மூன்று தனியார் துறை பணியாளர்களை போலீசார் புத்ரா ஜெயா மற்றும் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் கைது செய்தனர்.
தங்களுக்கு கிடைத்த புகாரின் பேரில் 23 முதல் 50 வயது வரையிலான இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோரை தாங்கள் கைது செய்ததாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அஸ்மி அபு பாக்கார் கூறினார்.
கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு பணிக்குழுவின் ஆய்வு அதிகாரி ஒருவர் செய்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை அதிகாரிகளாக பணியாற்றி வந்த அம்மூவரும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு கோவிட்-19 தடுப்பூசிகளை விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக அவர் மேலும் சொன்னார்.
இரண்டு டோஸ் தடுப்பூசிகளுக்கு அவர்கள் 420 வெள்ளி கட்டணம் விதித்துள்ளனர். எனினும், இரண்டு டோஸ் தடுப்பூசிகள் முழுமையாகச் செலுத்தப்பட்டப் பின்னரே பணத்தை செலுத்துவதற்கும் வாய்ப்பு வழங்கியுள்ளனர் என்றார் அவர்.
சந்தேக நபர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஆறு தொலைபேசிகள் மற்றும் இந்த விற்பனை நடவடிக்கை தொடர்பான சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறிய அவர், அம்மூவரும் மேல் விசாரணைக்காக மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.


