ஷா ஆலம், ஜூன் 24- உலு கிளாங் மற்றும் புக்கிட் அந்தாராபங்சா தொகுதிகளில் வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் கலந்து கொள்ளுமாறு அத்தொகுதி மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மாநில அரசின் ஏற்பாட்டிலான அந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் எம்.பி.ஏ.ஜே. ஏயு5 சமூக மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
“இந்த பரிசோதனை இயக்கத்தில் உலு கிளாங் மற்றும் புக்கிட் அந்தாராபங்சா தொகுதிவாசிகளும் சுற்றுவட்டார மக்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பரிசோதனை இயக்கம் சீராகவும் விரைவாகவும் நடைபெறுவதற்கு ஏதுவாக செலங்கா செயலி வாயிலாக முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள்“ என்று டிவிட்டர் வாயிலாக அவர் கேட்டுக் கொண்டார்.
இரண்டாம் கட்ட கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாநிலத்தில் ஐந்து விழுக்காட்டிற்கும் அதிகமாக நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவான தொகுதிகளை இலக்காக கொண்டு மாநில அரசு மூன்றாம் கட்ட பரிசோதனை இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்த மூன்றாம் கட்ட பரிசோதனை இயக்கம் காஜாங், புக்கிட் அந்தாராபங்சா , சுங்கை துவா, உலு கிளாங், கோம்பாக் செத்தியா, தாமான் டெம்ப்ளர், ஸ்ரீ செத்தியா ஆகிய தொகுதிகளை இலக்காக கொண்டுள்ளது.


