ஷா ஆலம், ஜூன் 24- கல்வியில் பின்தங்கிய மாணவர்களை இலக்காக கொண்டு செந்தோசா சட்டமன்றத் தொகுதி மேற்கொண்டு வரும் “நம்பிக்கை கல்வி ஒளி“ கல்வித் திட்டம் இயங்கலை வாயிலாக நடத்தப்படுகிறது.
பி.டி.பி.ஆர். எனப்படும் வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கை அமலில் இருக்கும் காலம் வரை அந்த சிறப்பு கல்வித் திட்டம் இயங்கலை வாயிலாக நடத்தப்படுவதாக செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
பள்ளிகள் இன்னும் திறக்கப்படாதாதால் மாணவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ள காரணத்தால் இயங்கலை வாயிலாக நடத்தப்படும் அந்த வகுப்புகள் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
இந்த கல்வித் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வகுப்புகளை தொடர்வதற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை நாங்கள் பரிசீலிக்கவுள்ளோம் என்றார் அவர்.
கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவும் நோக்கில் மூன்று மாத கால சிறப்பு கல்வித் திட்டத்தை செந்தோசா தொகுதி கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தொடக்கியது.
ஒன்பது முதல் பதிமூன்று வயது வரையிலான 20 மாணவர்கள் இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இம்மாணவர்கள் 3எம் எனப்படும் எண், எழுத்து மற்றும் வாசிப்பில் அடிப்படை அறிவைப் பெறுவதை இந்த திட்டம் இலக்காக கொண்டுள்ளது.


