கோவிட்-19 நோய்த் தொற்றை கையாள்வதில் மந்திரி புசார் தலைமைத்துவத்தின் விரிவான அணுகுமுறை
ஷா ஆலம், ஜூன் 24- சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்றை கையாள்வதில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையிலான நிர்வாகம் விரிவான அணுகுமுறையை கையாண்டு வருகிறது.
இலவச கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்வது தொடங்கி, தொழில்துறைகளில் நோய்த் தொற்றை ஒழிப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை நல்குவது மற்றும் தடுப்பூசிகளை சொந்தமாக வாங்குவது வரை அனைத்து விஷயங்களிலும் சிலாங்கூர் முன்மாதிரியாக விளங்குகிறது.
கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் மாநில அரசு மேற்கொண்டு வரும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் அறிகுறி ஏதுமின்றி நோய்த் தொற்றைக் கொண்டிருப்பவர்களை அடையாளம் காண்பதில் பெரிதும் துணை புரிந்துள்ளதாக தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சான் கூறினார்.
அதோடு மட்டுமின்றி, கோவிட்-19 மதிப்பீட்டு மையங்களில் சோதனை பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய தன்னார்வர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அம்மையங்களில் நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக தொலைபேசி சேவையை மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
அதிக மக்கள் தொகை காரணமாக சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டாலும் மாநில அரசு நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவிகளை வழங்கி வருகிறது என்று அவர் மேலும் சொன்னார்.
மக்களின் தேவையை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நன்கு உணர்ந்துள்ளார். உணவுப் பொருள் உதவி, இலவச கோவிட்-19 பரிசோதனை, சுய பரிசோதனை கருவிகள் விநியோகம், மாநில மக்களுக்காக தடுப்பூசி கொள்முதல் என பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அவர் தொடர்ந்து அமல்படுத்தி வருகிறார் என முகமது சானி குறிப்பிட்டார்.


