ஷா ஆலம், ஜூன் 23- வரும் சனிக்கிழமையன்று காஜாங்கில் நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்று பயனடையுமாறு வட்டார மக்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
மாநில அரசின் ஏற்பாட்டிலான் இந்த மூன்றாம் கட்ட கோவிட்-19 பரிசோதனை இயக்கம் ஸ்ரீ செம்பாக்கா மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும் என்று அவர் சொன்னார்.
இந்த பரிசோதனை இயக்கத்தில் கலந்து பயன் பெறுமாறு காஜாங் தொகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களை கேட்டுக் கொள்கிறோம். இச்சோதனை இயக்கம் சீராகவும் விரைவாகவும் நடைபெறுவதற்கு ஏதுவாக செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.
விரைவு ஆண்டிஜென் (ஆர்.டி.கே-ஏஜி) உபகரணம் மூலம் நடத்தப்படும் இச்சோதனையின் வாயிலாக 30 நிமிடங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
நோய்ப் பரவல் அதிகம் உள்ள பகுதிகளை குறிப்பாக தொழில்துறைகள் மற்றும் தொழிற்சாலைகளை மையமாக கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்திற்கு ஒரு கோடியே 70 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
இந்த மூன்றாம் கட்ட இலவச பரிசோதனை இயக்கம் ஸ்ரீ செத்தியா, தாமான் மேடான், கோம்பாக் செத்தியா, தாமான் டெம்ப்ளர், சுங்கை துவா ஆகிய தொகுதிகளில் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட வேளையில் உலு கிளாங் மற்றும் புக்கிட் அந்தாரா பங்சா தொகுதிகளில் வரும் 27 ஆம் தேதி நடத்தப்படுகிறது.


