ஷா ஆலம், ஜூன் 22- கடந்த வாரம் வீசிய கடும் புயலால் மேரு வட்டாரத்தில் பாதிக்கப்பட்ட ஆறு வீடுகளைச் சீரமைக்கும் பணி நாளை முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை மூன்று வீடுகள் முற்றாக சீரமைக்கப்பட்ட வேளையில் எஞ்சிய வீடுகளைச் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமது ஃபக்ருள்ராஸி முகமது மொக்தார் கூறினார்.
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட வீடுகளும் கூரை காற்றில் பறந்தது போன்ற சிறு பழுதுகளை கொண்ட வீடுகளும் சரி செய்யப்பட்டு விட்டதாக அவர் சொன்னார்.
அந்த வீடுகளைப் பழுதுபார்க்க இதுவரை இருபதாயிரம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளை துப்புரவு செய்வதும் இதில் அடங்கும் என்றார்.
இந்த பேரிடரில் பாதிக்கப்பட்ட ஐம்பது பேர் பேரிடர் நிதிக்கு மாவட்ட அலுவலகம் வாயிலாக விண்ணப்பம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் காரணமாக இந்த மனுக்களை பரிசீலிப்பதற்கு குறைந்தது இரண்டு மாதங்கள் பிடிக்கும் எனவும் அவர் சொன்னார்.
கடந்த வாரம் வியாழக்கிழமை பெய்த கடும் புயலுடன் கூடிய அடைமழையில் மேரு வட்டாரத்தைச் சேர்ந்த பல குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகள் சேதமடைந்ததோடு மரங்களும வேறோடு சாய்ந்தன.


