ஷா ஆலம், ஜூன் 22- வரும் புதன்கிழமை அனுசரிக்கப்படவிருக்கும் ஓராண்டு நிறைவையொட்டி செல்டேக் எனப்படும் சிலாங்கூர் இலக்கவியல் மின்-விநியோக நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச பொருள் பட்டுவாடா சேவையை வழங்கவுள்ளது.
இந்த சலுகையைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் குறைந்தது 150 வெள்ளி பெருமானமுள்ள சமையல் பொருள்களை வாங்க வேண்டும் என்று செல்டேக் அறிக்கை ஒன்றில் கூறியது.
அதோடு மட்டுமின்றி சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 6 வெள்ளி மதிப்பிலான விலைக்கழிவும் வழங்கப்படும். மேலும், 200 வெள்ளிக்கு மேல் பொருள்களை வாங்குவோர் பொருள் விநியோகச் சேவையை இலவசமாக பெற முடியும். தவிர, செல்டேக் மார்க்கெட்பிளேஸ் செயலி வாயிலாக தொடர்ந்து பொருள் வாங்குவோருக்கு பத்து வெள்ளிக்கான பற்றுச் சீட்டும் வழங்கப்படும் என அந்த அறிக்கை தெரிவித்தது.
‘செயலியிலிருந்து வெளியேறும் போது HAPPY6 எனும் ஊக்குவிப்பு குறியீட்டை மறவாமல் பதிவிடுங்கள். www.seldec.com.my எனும் அகப்பக்கம் வாயிலாக பொருள் வாங்குங்கள். வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள்ள இந்த ஊக்குவிப்பு குறியீட்டை பதிவிட்டு பயன்பெறுங்கள்‘ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


