புத்ரா ஜெயா, ஜூன் 22- நாட்டு மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் அல்லது 32 லட்சம் பேர் வரும் ஜூலை மாத மத்திய பகுதி வாக்கில் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி செலுத்தும் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது மற்றும் அதிக அளவில் தடுப்பூசி தருவிக்கப்படுவது ஆகிய காரணங்களின் அடிப்படையில் இந்த இலக்கை அடைவது சாத்தியப்படும் என்று கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
தற்போது 40 லட்சத்து 78 ஆயிரத்து 620 பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளும் 36 லட்சத்து 87 ஆயிரத்து 880 சினோவேக் தடுப்பூசிகளும் 8 லட்சத்து 28 ஆயிரம் அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிகளும் பெறப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
அடுத்த மாதம் இரண்டாம் வாரம் தொடங்கி நாட்டிற்கு வரும் பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளின் எண்ணிக்கை வாரந்தோறும் அதிகரிக்கும். அதே போல் மேலும் அதிகமான அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசி அடுத்த மாத தொடக்கத்தில் நாடு வந்தடையும் என்றார் அவர்.
நாட்டில் தடுப்பூசி பெறுவோரின் அதிகப்பட்ச தினசரி எண்ணிக்கை 221,706 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து தினசரி தடுப்பூசிக்கான இலக்கை தாங்கள் 300,000 ஆக உயர்த்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய மீட்சித் திட்டத்தின் இலக்கை அடைவதற்காக தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை நாடு முழுவதும் தீவிரப்படுத்துவதில் அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாகவும் அவர் சொன்னார்.
பத்து விழுக்காட்டு இலக்கை அடைவதற்காக இம்மாதம் எண்பது லட்சம் பேருக்கு தடுப்பூசியைச் செலுத்த அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.


