ஷா ஆலம், ஜூன் 22- வரும் 2030ஆம் ஆண்டிற்குள் சிலாங்கூரை வான் போக்குரத்துத் துறையின் முக்கிய மையமாக உருவாக்க மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி லட்சியம் கொண்டுள்ளார். இந்நோக்கத்தை அடைவதற்காக மாநிலத்தில் திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதில் அவர் முனைப்பு காட்டி வருகிறார்.
முதலீட்டு மதிப்பை மட்டுமல்லாது பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்பையும் கருத்தில் கொண்டு மந்திரி புசார் வான் போக்குவரத்து துறையின் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்துவதாக தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
சிலாங்கூர் மாநில மனிதவள மேம்பாட்டு மையம் மற்றும் ஜி.இ. என்ஜின் செர்விசஸ் சென்.பெர்ஹாட் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட விவேக பங்காளித்துவத்தின் வாயிலாக கடந்த 2019ஆம் ஆண்டில் வான் போக்குவரத்து துறையில் 46 பொறியியலாளர்களை உருவாக்க முடிந்ததாக அவர் சொன்னார்.
வான் போக்குவரத்து துறையில் மந்திரி புசார் கொண்டிருக்கும் ஈடுபாடு தெளிவானது. பிரான்சின் துலிசில் உள்ள ஏர்பஸ் அலுவலத்தை அவர் பார்வையிட்டுள்ளார். சிலாங்கூரில் அத்துறையை மேம்படுத்தும் நோக்கில் மக்ரிபியில் உள்ள விமான தயாரிப்பு தொழிற்சாலையையும் அவர் பார்வையிட்டுள்ளார் என்று தெங் தெரிவித்தார்.
மந்திரி புசாரின் இந்த மூன்றாண்டு கால தலைமைத்துவத்தில் ஜி.இ. என்ஜின் செர்விசஸ் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட விவேக பங்காளித்துவத்தின் வாயிலாக 46 பொறியியலாளர்களை உருவாக்கியுள்ளோம். மேலும் அதிகமான பொறியிலாளர்கள் தயார் படுத்தப்பட்டு வருகின்றனர் என்றார் அவர்.
வரும் புதன்கிழமையுடன் நிறைவடையும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் மூன்றாண்டு கால நிர்வாகம் குறித்து கருத்துரைத்த போது அவர் இவ்வாறு கூறினார்.


