கோலாலம்பூர், ஜூன் 22- மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறியதற்காக கடந்த ஜூன் முதல் முதல் தேதி தொடங்கி 150 கட்டுமானப் பகுதிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள 2,423 கட்டுமானப் பகுதிகள் மீது சி.ஐ.டி.பி. எனப்படும் தொழில்துறை கட்டுமான மேம்பாட்டு வாரியம் கொண்ட சோதனையில் 446 பகுதிகளில் பணிகள் நடைபெறுவது கண்டு பிடிக்கப்பட்டதாக பொதுப்பணித் துறை அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்ட அந்த 446 பகுதிகளில் 150 முறையான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை. அதிக எண்ணிக்கையிலான பகுதிகளில் எஸ்.ஒ.பி. விதிமுறைகள் பின்பற்றப்படாத விவகாரத்தை அமைச்சு கடுமையாக கருதுகிறது. இது மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்பதோடு கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை கீழறுக்கும் வகையில் உள்ளது என்று அது தெரிவித்த து.
கட்டுமானப் பகுதிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்குமிடங்களில் எஸ்.ஒ.பி. விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை குத்தகையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கட்டுமானப் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பதோடு நோய்த் தொற்று இல்லாதவர்கள் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்தியது.
எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கத் தவறும் குத்தகையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு எச்சரித்தது.


