ஷா ஆலம், ஜூன் 21- கோவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் வர்த்தம் சம்பந்தப்பட்ட இலவச விளம்பர வாய்ப்பினை மீடியா சிலாங்கூர் சென். பெர்ஹாட் (மீடியா சிலாங்கூர்) வழங்குகிறது.
‘வர்த்தக உதவி இயக்கம்‘ எனும் பெயரிலான இந்த விளம்பர வாய்ப்புத் திட்டம் நேற்று தொடங்கி ஒரு மாத காலத்திற்கு அமலில் இருக்கும். வர்த்தகர்கள் அதிகமான வாடிக்கையாளர்களை பெறுவதை ஊக்குவிப்பதற்கும் மாநில அரசின் இலக்கவியல் கொள்கையின் வெற்றிக்கு உதவும் நோக்கிலும் இந்த இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
அதிகமான வாசகர்களை சென்றடையும் நோக்கில் சமூக ஊடகங்கள், சிலாங்கூர் கினி உள்பட மீடியா சிலாங்கூரின் கீழுள்ள அனைத்து ஊடகப் பிரிவுகளிலும் இந்த அறிவிப்புகள் வெளியிடப்படும்.
இந்த இயக்கத்தில் பங்கு கொள்ள விரும்புவோர்selangorkini.my/bantuniaga. அகப்பக்கத்தில் உள்ள பாரங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மீடியா சிலாங்கூர் தரப்பு தொடர்பு கொள்ளும்.
மேல் விபரங்களுக்கு marketing@mediaselangor.com எனும் மின்னஞ்சல் வாயிலாகவும் 010-552 4856 என்ற வாட்ஆப் புலனம் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.
இந்த இயக்கத்தில் பங்கேற்பதற்கான நிபந்தனைகள் வருமாறு-
- சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையைச் சேர்ந்த தொழில் முனைவோராக இருக்க வேண்டும்.
- சிலாங்கூரில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்பவராக இருக்க வேண்டும்.
- பொது முடக்கம்/ நோய்ப் பரவலால் வர்த்தகம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- சமூக ஊடகங்களில் கணக்கு வைத்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு முகநூல், இன்ஸ்டாகிராம்,டிவிட்டர்.(இருந்தால் குறிப்பிடவும்)


