ஷா ஆலம், ஜூன் 21:- மலேசியா எம்.ஆர்.என்.ஏ. ரைபோ கருவமிலத்தின் தொழில்நுட்பத்தைக் கொண்டு சொந்தமாக கோவிட்-19 தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் மருத்துவ ஆய்வுக் கழகம் (ஐ.எம்.ஆர்.) மற்றும் மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் (யு.பி.எம்.) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த தடுப்ப்பூசியை மேம்படுத்தும் பணி கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இயற்கை வைரஸ் தொடங்கி சார்ஸ்-கோவி-2 வரையிலான வைரஸ்களை படியாக்கம் செய்யும் கட்டத்தை அந்த ஆய்வு எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தேசிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கம் தொடர்பான செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். அறிவியல், தொழிநுட்ப மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடினும் இந்த செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
தடுப்பூசியை மேம்படுத்தும் பணி முற்றுப் பெற்றவுடன் முன்பரிசோதனை நடவடிக்கையாக அது சிறிய மற்றும் பெரிய பிராணிகளுக்குச் செலுத்தப்பட்டு ஆக்கத்திறன் சோதிக்கப்படும். அதன் பின்னர் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு மூன்று கட்டச் சோதனை மேற்கொள்ளப்படும். அதன் பிறகே அந்த தடுப்பூசியை பதிவு செய்யும் மற்றும் சந்தைப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்ற பின்னரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நோய்த் கண்டறியப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இத்தகைய 1,480 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட வேளையில் ஒருவருக்கு ஆக்சிஜன் பயன்படுத்தும் அளவுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.


