கோம்பாக், ஜூன் 21- கோவிட்-19 நோய்த் தொற்று கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவோர் வீட்டிலிருந்தாறு தங்கள் உடல் நிலை குறித்து அறிந்து கொள்ள உதவும் சுய பரிசோதனை கருவிகளை தயார் செய்ய மாநில அரசு 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
200 வெள்ளி மதிப்பிலான அந்த உபகரணப் பெட்டி, ஆக்சிஜன் அளவை கணக்கிடும் ஆக்சிமீட்டர், மருந்துகள், வெப்பமானி, முகக்கவசம் ஆகியவைற்றைக் கொண்டிருக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சொன்னார்.
ஒரு வீட்டில் ஐவர் கோவிட்-19 நோய் தொற்றுக்கான அறிகுறியைக் கொண்டிருந்தால் அவர்களுக்கு ஒரு ஆக்சிமீட்டர் மட்டுமே வழங்கப்படும். எனினும், மருந்துகள் தனித் தனியாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.
சுங்கை துவா, கோம்பாக் செத்தியா மற்றும் தாமான் டெம்ப்ளர் தொகுதிகளில் நேற்று நடைபெற்ற மூன்றாம் கட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கள் உடல் நிலை குறித்து அறிந்து கொள்வதற்கு ஏதுவாக நடப்பு தேவையின் அடிப்படையில் அந்த உபகரணத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநில அரசு தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
உடல் நிலை மோசமடையும் பட்சத்தில் சம்பந்தப்பட்டர்கள் மாவட்ட சுகாதகார இலாகாவை தொடர்பு கொள்ளலாம். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் போது எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பில் நாங்கள் வழிகாட்டியை வழங்குகிறோம் என்றார் அவர்.


