ஷா ஆலம், ஜூன் 21- டிங்கில் வட்டாரத்திலுள்ள கட்டுமானப் பகுதிகளில் இன்று விடியற்காலை குடிநுழைவுத் துறை நடத்திய சோதனையில் 309 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
மொத்தம் 715 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 20 முதல் 50 வயதுக்குற்பட்ட 280 ஆண்களும் 29 பெண்களும் தடுத்து வைக்கப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ கைருள் ஜைமி டாவுட் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் 193 இந்தோனேசியர்கள், 102 வங்காளதேசிகள், நான்கு வியட்னாமியர்கள், எட்டு மியன்மார் பிரஜைகள் மற்றும் இரு இந்தியர்களும் அடங்குவர் என்று அவர் சொன்னார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளுக்கு எதிராக நெருக்கடி மிகுந்த இடங்களில் அந்த அந்நியக் குடியேறிகள் வசிப்பது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகாரின் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.‘
இப்புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கட்டுமானப் பகுதிகள் மீது தாங்கள் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் அவர்கள் அனைவரும் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறியிருந்த து கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
அமலாக்க அதிகாரிகளுடன் அந்த கட்டுமானப் பகுதிக்குச் சென்றபோது அந்த பகுதி அசுத்தம் நிறைந்த தாகவும் முறையான கால்வாய் வசதியின்றியும் இருந்ததையும் கண்டேன். மேலும் பலர் ஒன்றாக கூடியிருந்ததோடு உணவும் உட்கொண்டிருந்தனர் என்று அவர் மேலும் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் ஏதுமின்றி சுதந்திரமாக செயல்படுவதற்குதிய சூழல் அந்த கட்டுமானப்பகுதியி காணப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
அந்நியத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களில் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தீவிர சோதனைகளை நடத்தும்படி உள்துறை அமைச்சு குடிநுழைவுத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது என்று அவர் தெரிவித்தார்.


