ஷா ஆலம், ஜூன் 21- அஸ்ட்ரோஸேனேகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மருந்தளவை செலுத்துவதற்கான கால இடைவெளியை 12 வாரங்களிலிருந்து 6 வாரங்களாக குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
நாட்டின் கோவிட்-19 நோய்த் தொற்றின் நிலவரம் குறித்த நிபுணர்களின் அறிக்கையைப் பொறுத்து இதன் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
இரண்டாவது தடுப்பூசியை விரைவாக பெறும் பட்சத்தில் நோய்த் தொற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பை சம்பந்தப்பட்டவர்கள் பெறுவார்களா? என்பதை கண்டறிய வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசியின் ஆக்கத்தன்மைக்கு அதிக வீரியம் கொண்ட புதிய வகை கோவிட்-19 நோய்த் தொற்று பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை கண்டறிய மரபணு வரிசை மீதான ஆய்வை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
தற்போது அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசியின் முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் மருந்தளவை செலுத்துவதற்கான கால இடைவெளி 12 வாரங்களாக உள்ளன.


