கோலாலம்பூர், ஜூன் 19- தேசிய மீட்சித் திட்டத்தின்படி நாடு இரண்டாம் கட்டத்திற்கு மாற வேண்டுமானால் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 4,000க்கும் கீழ் தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு பதிவாக வேண்டும்.
இது தவிர, மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கட்டில்களின் பயன்பாடு 75 விழுக்காட்டிற்கு குறைய வேண்டும் என்பதோடு நாட்டு மக்களில் 10 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
இறைவன் அருளால் தடுப்பூசி பெறுவதற்கான இலக்கை தாண்டி 11 விழுக்காட்டை பூர்த்தி செய்து விட்டோம். இந்த மதிப்பீட்டு அணுமுறையின் வழி இரண்டாம், மூன்றாம், நான்காம் கட்டத்தை நோக்கி நாம் முன்னேற முடியும் என்றார் அவர்.
அரசாங்கம் அமல்படுத்தியுள்ள மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தேசிய மீட்சித் திட்டத்தை அடைவதற்கான சிறந்த வழிமுறையாக விளங்குவதாக நேற்று பெர்மானா டிவியில் இடம் பெற்ற விவாத நிகழ்வொன்றில் அவர் கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்றை வெற்றி கொள்வதற்கு நமக்கு மிகுந்த மனவுறுதி வேண்டும். சுகாதார நடவடிக்கைகள், தடுப்பூசித் திட்டம் மற்றும் மக்களின் ஒருமித்த ஆதரவு ஆகியற்றின் வாயிலாக மட்டுமே இதனை சாதிக்க முடியும். தவிர, மிகவும் ஆபத்தான புதிய வகை நோய்த் தொற்றுகளின் பரவலையும் எதிர்கொள்ளும் நிலையில் நாம் இருக்கிறோம் என்றார் அவர்.


