டிங்கி மரணச் சம்பவங்கள் இவ்வாண்டில் 90 விழுக்காடு குறைந்தது
ஷா ஆலம், ஜூன் 19- சிலாங்கூரில் இவ்வாண்டு தொடங்கி ஜூன் 5ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் டிங்கி காய்ச்சல் சம்பந்தப்பட்ட மரணச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன.
கடந்தாண்டின் முதல் ஐந்து மாதங்களில் 46,713 ஆக இருந்த டிங்கி நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டின் அதே காலக்கட்டத்தில் 75.1 விழுக்காடு குறைந்து 11,629 ஆக ஆனதாக சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
டிங்கி காய்ச்சல் காரணமாக ஏற்பட்ட மரணச் சம்பவங்களின் எண்ணிக்கையும் 92.7 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்தாண்டில் 82 மரணங்கள் சம்பவித்த வேளையில் இவ்வாண்டு 6 சம்பவங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன என்றார் அவர்.
ஏடிஸ் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிலாங்கூ மாநில அரசு 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அத்திட்டத்தை மேற்கொள்வதற்காக ஊராட்சி மன்றங்களிடம் அந்த நிதி ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


