ஷா ஆலம், ஜூன் 18- டெல்டா வகை புதிய கோவிட்-19 நோய்த் தொற்று இதர வகை நோய்த் தொற்றுகளை விட விரைவாக பரவும் என்பதோடு அதிக உயிர் பலியையும் ஏற்படுத்தும் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் சுகாதாரத் துறை முற்றிலும் முடங்கும் அளவுக்கு நோய்த் தொற்று சுனாமியை ஏற்படுத்திய இந்த டெல்டா வகை நோய்த் தொற்று தற்போது 80 நாடுகளில் பரவியுள்ளதாக அமைச்சு கூறியது.
கடந்த மே 24ஆம் தேதி முதல் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் மலேசியர்கள் நிர்ணயிக்கப்பட்ட தனிமைப்படுத்தும் மையங்களில் 21 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுத்தப்பட வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
இந்தியாவில் முதலில் தோன்றிய நோய்த் தொற்று வகைகளை உள்ளடக்கிய 13 நோய்த் தொற்று சம்பவங்கள் இம்மாதம் 10ஆம் தேதி வரை நாட்டில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.


