ஷா ஆலம்,ஜூன் 18- வரும் ஆகஸ்டு மாதவாக்கில் சிலாங்கூர் சட்டமன்றத்தை கூட்டுவது தொடர்பில் மாநில சட்டமன்ற சபாநாயகர் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானிடம் அனுமதி கோரவுள்ளார்.
இதன் தொடர்பில் தாம் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் அல்ஹாஜ் அவர்களுக்கு விரைவில் கடிதம் அனுப்பவுள்ளதாக சபாநாயகர் இங் சுயி லிம் கூறினார்.
மேன்மை தங்கிய சுல்தானிடமிருந்து அனுமதி கிடைத்தால் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.
மாநில சட்டமன்றத்தை கூட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட தேதியில் அவசரகாலம் அமலாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மாமன்னரிடம் இதற்கான அனுமதியை கோருவார் என அவர் தெரிவித்தார்.
வரும் ஆகஸ்டு மாதம் முதல் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ள அவசரகால நிலையை மத்திய அரசு நீட்டிக்குமா என்று கேள்வியெழுந்துள்ள்ள நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவ குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் விரைவில் கூட்டப்பட வேண்டும் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் கடந்த புதன் கிழமையன்று உத்தரவிட்டிருந்தார். மலாய் ஆட்சியாளர்களுடன் சந்திப்பு நடத்திய அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.


