ஷா ஆலம், ஜூன் 18- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 34 தடுப்பூசி மையங்களுக்கு கிராப் மின் அழைப்பு வாகனங்கள் மூலம் சென்று திரும்புவதற்கு வழங்கப்படும் 20 வெள்ளி கட்டணக் கழிவை பெற வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி விண்ணப்பிக்கலாம்.
வரும் ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் இந்த கட்டண கழிவு திட்டத்திற்கு www.platselangor.com. என்ற அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்று எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் கூறியது. மேலும், csr@mbiselangor.com.my என்ற மின்னஞ்சல் வாயிலாவும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அது தெரிவித்தது.
நிறுவன சமூக கடப்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக கிராப் செயலியை பதிவிறக்கம் செய்துள்ள 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த அனுகூலம் வழங்கப்படுகிறது என்று எம்.பி.ஐ குறிப்பிட்டது.
வரும் ஜூலை முதல் தேதி தொடங்கி தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு செல்ல கிராப் வாகன சேவையை பயன்படுத்துவோருக்கு 20 வெள்ளி கட்டணக் கழிவு வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த 9ஆம் தேதி கூறியிருந்தார்.
கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த கட்டணக் கழிவு திட்டத்திற்காக 10 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ள வேளையில் இதன் வழி சுமார் ஐம்பதாயிரம் பேர் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


