ஷா ஆலம், ஜூன் 18- முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கத் தவறியதற்காக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் சிலாங்கூர் மாநில பிரிவு 72 வணிகர்களுக்கு 225,000 வெள்ளி அபராதம் விதித்துள்ளது.
இம்மாதம் 1ஆம் தேதி முதல் கடந்த புதன் கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையின் போது மைசெஜாத்ரா செயலியை ஸ்கேன் செய்யத் தவறியது, கிருமி நாசினி வைக்காதது, அத்தியாசிய துறைகள் பட்டியலில் இல்லாத கடைகளை திறந்தது, சுய சேவை சலவை நிலையங்களில் பணியாளர்களை நியமிக்காதது ஆகிய குற்றங்களுக்காக அவர்களுக்கு குற்றப்பதிவு வழங்கப்பட்டதாக அமைச்சின் மாநில இயக்குநர் முகமது ஜிக்ரில் அசான் அப்துல்லா கூறினார்.
சுய சேவ சலவை மையங்களில் பணியாளர்களை நியமிக்காததற்காக நாங்கள் குற்றப்பதிவு வழங்கியுள்ளோம். வாடிக்கையாளர்கள் எஸ்.ஒ.பி.விதிமுறைகளைப் பின்பற்றுவதை கண்காணிக்க பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனையாகும் என்றார் அவர்.
1988 ஆம் ஆண்டு தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட வர்த்தக மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இக்காலக்கட்டத்தில் அரிசி, சீனி, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கண்காணிப்பதற்காக 9,739 வர்த்தக மையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் சொன்னார்.


