ஷா ஆலம், ஜூன் 18- வரும் ஜூலை மாதம் நடத்தத் திட்டமிட்டிருந்த இவ்வாண்டிற்கான சிலாங்கூர் வேலை வாய்ப்புச் சந்தை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வேலை தேடுவோருக்கு பொருத்தமான வேலைகளைத் தேடித் தரும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக இளைஞர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.
அடிமட்ட நிலை தொடங்கி நிபுணத்துவ துறைகள் வரை அனைத்து வகையான வேலை வாய்ப்புகளையும் இந்த வேலை வாய்ப்புச் சந்தை வழங்கியது. மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் இயங்கலை வாயிலாக இந்த வேலை வாய்ப்புச் சந்தையை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் 3,000 முதல் 5,000 பேர் வரை பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய பல்வேறு தரப்பினருடன் தமது தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த முறை முறை நடைபெற்ற வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கேற்ற நிறுவனங்கள் தங்களின் ஒத்துழைப்பைத் தொடர வாக்குறுதியளித்துள்ளன. இதன் மூலம் கோவிட்-19 நோய்ப்பரவலால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.
அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரக்கூடிய இந்த வேலை வாய்ப்புச் சந்தை கடந்தாண்டு கோல சிலாங்கூர், கோம்பாக், சுங்கை பூலோ, உலு லங்காட், ஷா ஆலம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.


