கோலாலம்பூர், ஜூன் 18- தடுப்பூசித் திட்டத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை சி.ஐ.டி.எப். எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி திட்ட சிறப்பு பணிக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது.
பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை 12 வயதுக்கும் மேற்பட்ட சிறார்களுக்குச் செலுத்துவதற்கு தேசிய மருந்தக ஒழுங்கு முறை அமைப்பு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இந்த பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மூத்த கல்வியமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் கூறினார்.
இது வரை 90,000 ஆசிரியர்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். சிறப்பானதை செய்யும் கடப்பாட்டை கல்வியமைச்சு எப்போதும் கொண்டுள்ளது என்றார் அவர்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தடுப்பூசித் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுவது தொடர்பான தகவலை தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சரும் சி.ஐ.டி.எப். தலைவருமான கைரி ஜமாலுடின் நேற்று வெளியிட்டிருந்தார்.
ஐந்தாம் படிவத்தில் 357,00 மாணவர்கள் பயிலும் வேளையில் அவர்களுக்கு 47,000 ஆசிரியர்கள் பாடம் போதிப்பது கல்வியமைச்சு தமக்கு வழங்கிய தரவுகள் காட்டுவதாக கைரி கூறினார்.
தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்காக பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளியுடன் தொடர்புடைய பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கவுள்ளோம் எனிறார் அவர்.


