கோலாலம்பூர்- ஜூன் 16- தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெறுவோரின் தினசரி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று 215,876 பேர் தடுப்பூசி பெற்ற வேளையில் இதன்வழி, தினசரி இரண்டு லட்சம் பேராக நிர்ணயிக்கப்பட்ட தடுப்பூசி பெறுவோருக்கான இலக்கு வெற்றிகரமாக அடையப்பட்டுள்ளது.
நேற்று 160,226 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 55,650 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மொத்தம் 14 லட்சத்து 68 ஆயிரத்து 689 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாக பெற்றுள்ள வேளையில் 34 லட்சத்து 35 ஆயிரத்து 420 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இதன் வழி தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்து 4 ஆயிரத்து 109ஆக உயர்ந்துள்ளது என்றார் அவர்.
சிலாங்கூரில் ஆகக்கூடுதலாக 187,443 பேர் இதுவரை தடுப்பூசி பெற்றுள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் சரவா (168,471), ஜொகூர் (142,868), பேராக் (139,612), கோலாலம்பூர் (131,882) ஆகிய மாநிலங்கள் உள்ளன.


