ஷா ஆலம், ஜூன் 16- சிலாங்கூர் மாநில அரசின் தடுப்பூசிகளை சொந்தமாக வாங்கும் திட்டத்தின் வாயிலாக தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை விரைவுபடுத்த முடியும் என கருதப்படுகிறது. வரும் ஆகஸ்டு மாதம் தொடங்கி நாளொன்றுக்கு 165,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கை இதன் மூலம் அடைவதற்குரிய வாய்ப்பு ஏற்படும்.
வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மாநில மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் தடுப்பூசியைப் பெற்றிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த வியூகம் வரையப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் தடுப்பூசித் திட்டத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் இந்த தடுப்பூசி கொள்முதல் திட்டம், நோய்த் எதிர்ப்பு சக்தி கொண்ட குழுமத்தை உருவாக்கும் இலக்கை அடைவதை விரைவுபடுத்த முடியும் என்பதோடு தினசரி 165,000 பேர் தடுப்பூசியை பெறுவதை உறுதி செய்யவும் இயலும் என்றார் அவர்.
மாநில கோவிட்-19 தடுப்பூசித் திட்ட பணிக்குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்தும் மையங்களில் தன்னார்வலர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் குறிப்பிட்ட சில இடங்களில் தடுப்பூசி செலுத்தும் மையங்களை அதிகப்படுத்துவது ஆகியவற்றை அந்த வியூகம் உள்ளடக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


