தடுப்பூசிக்கு பதிவு செய்யாத முதியோரை அடையாளம் காண்பதில் கோவிட்-19 நடவடிக்கை மன்றம் தீவிரம்
ஷா ஆலம், ஜூன் 16- தடுப்பூசி பெறுவதற்கு இன்னும் பதிந்து கொள்ளாத மூத்த குடிமக்களை அடையாளம் காணும் முயற்சியில் கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை மன்றம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் சிலாங்கூர் நிலையிலான இரண்டாம் கட்ட நடவடிக்கையில் பதிவு செய்த முதியோரில் 88 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது.
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் மற்றும் சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை மன்றத்தின் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வெளியிட்ட கூட்டறிக்கையில் இவ்விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் மட்டுமின்றி நோய்களில் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளும் இந்த தடுப்பூசித் திட்டத்தில் பதிந்து கொள்வதை உறுதி செய்வதில் தாங்கள் தீவிரம் காட்டுவதாக அந்த அறிக்கை கூறியது.
தொழில்துறைகள் மற்றும் தொழிற்சாலைக ஊழியர்களுக்கும் இந்த தடுப்பூசி இயக்கத்தில் முக்கியத்துவம் அளிக்கவிருக்கிறோம். சிலாங்கூர் மட்டுமின்றி நெகிரி செம்பிலான் மற்றும் ஜொகூரில் அதிகரித்து வரும் வேலையிட தொற்று மையங்களை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
சிலாங்கூர் நிலையிலான கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை முன்னெடுத்துள்ள மாநில அரசுக்கும் தேசிய நிலையிலான கோவிட்-19 நடவடிக்கை மன்றம் தனது பாராட்டைத் தெரிவித்துக் கொண்டது.


