கோலாலம்பூர், ஜூன் 16- வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அதாவது தேசிய மீட்சி திட்டத்தின் மூன்றாம் கட்ட அமலாக்கத்தின் போது நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கான சாத்தியம் உள்ளது.
எனினும், அந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படுவது அவசியம் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.
பொருத்தமான நேரத்தில் அதாவது கோவிட்-19 நோய்த் தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்து தடுப்பூசித் திட்டமும் முழுமையடையும் பட்சத்தில் நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயக முறை மீண்டும் செயல்பட இயலும் என்பது தொடக்கம் முதல் எனது நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது என்று அவர் சொன்னார்.
முடியாட்சியுடன் கூடிய நாடாளுமன்ற ஜனநாயக கோட்பாட்டில் நான் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறேன். கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான அரசாங்கத்தின் போராட்டம் சீர்குலையும் அளவுக்கு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதை சில தரப்பினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான சாத்தியம் உள்ள துறைகள் தவிர்த்து இதர பொருளாதார துறைகள் செயல்படுவதற்கு இந்த மூன்றாம் கட்ட மீட்சித் திட்டத்தில் அனுமதிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.


