ஷா ஆலம், ஜூன் 16- பொருளாதார நடவடிக்கைகள் சரிவை எதிர்நோக்குவதை தவிர்க்க தொழில்துறை சார்ந்த பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் சிலாங்கூர் அரசு கவனம் செலுத்தும்.
மாநிலத்தின் மேம்பாட்டிற்கு முக்கியப் பங்கினை ஆற்றும் காரணத்தால் அத்துறைக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியமாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
தொழில்துறைகள் வீழ்ச்சி கண்டால் முதலாளிகளுக்கு மட்டும் இழப்பு ஏற்படாது, மாறாக தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூரிலுள்ள தொழில்துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கும் அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல் அமைச்சின் நடவடிக்கைளுக்கு உதவும் வகையிலும் தங்களின் இத்திட்டம் அமைவதாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்ட நடவடிக்கை மன்றத்தின் சிலாங்கூர் மாநில நிலையிலான கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடினும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
சிலாங்கூர் அரசு முன்னெடுத்துள்ள சிலாங்கூர் தடுப்பூசித் திட்டம் கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பதில் மத்திய அரசின் சுமையை குறைக்கும் என்று அமிருடின் நம்பிக்கைத் தெரிவித்தார்.


