ஷா ஆலம், ஜூன் 15- மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு கோல சிலாங்கூர் மாவட்ட மன்றம் 200 உணவுக் கூடைகளை வழங்கியுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பொருளாதார சிக்கலை எதிர்நோக்கியிருக்கும் வசதி குறைந்தவர்களின் சுமையை ஓரளவு குறைக்கும் நோக்கில் அரிசி, சமையல் எண்ணெய், பிஸ்கட், மீ போன்ற உணவுப் பொருள்கள் விநியோகிக்கப்படுவதாக மாவட்ட மன்றத் தலைவர் ரஹில்லா ரஹ்மாட் கூறினார்.
கோல சிலாங்கூர், புஞ்சா ஆலம் மற்றும் சவுஜானா உத்தாமா ஆகிய பகுதிகளில் உள்ள 14 அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு இந்த உணவுப் பொருள் விநியோகம் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த உணவுப் பொருள் உதவி பொருளாதார ரீதியில் பாதிப்பை எதிர்நோக்கியிருக்கும் குடும்பங்களுக்கு ஓரளவு உதவியாக இருக்கும் எனத் தாம் நம்புவதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.


