புத்ரா ஜெயா, ஜூன் 12- இம்மாதம் 14 ஆம் தேதியுடன் முடிவடையும் நடமாட்ட அனுமதிக்கான கடிதங்கள் அல்லது பெர்மிட்டுகளை தொழிலாளர்கள் மற்றும் பொருளாதார துறை சார்ந்தவர்கள் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.
அந்த அனுமதி கடிதங்கள் மற்றும் பெர்மிட்டுகளை கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இம்மாதம் 28ஆம் தேதி முடிவுக்கு வரும் வரை போலீசார் ஏற்றுக் கொள்வர் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.
சாலைத் தடுப்பு சோதனைகளில் கண்காணிப்பு பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் வரும் ஜூன் மாதம் 28ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதால் 12 அமைச்சுகள் மற்றும் அரசு துறைகள் வெளியிட்டுள்ள அனுமதி கடிதங்களை போலீசார் ஏற்றுக் கொள்வது என தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்றார் அவர்.
போலீசார் இக்காலக்கட்டத்தில் சுமார் ஆயிரம் சாலைத் தடுப்புகளை நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளதோடு பொறுப்பற்றத் தரப்பினர் கள்ளத்தனமாக மாநில, மாவட்ட எல்லைகளைக் கடக்க பயன்படும் 129 குறுக்கு வழிகளையும் மூடியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நடமாட்ட அனுமதி கடிதங்களை போலியாக தயாரிக்கும் அல்லது அத்தகைய கடிதங்களைப் பெறுவதற்கு பொய்யான தகவல்களைக் கூறும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.


