சபாக் பெர்ணம், ஜூன் 12- சபாக் பெர்ணம் மாவட்டத்தின் மூன்று மாவட்டங்களில் அமல் செய்யப்பட்ட கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்று நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவுக்கு வருகிறது.
கடந்த மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கிய அந்த 14 நாள் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாட்டு ஆணை தாமான் பெர்த்தாமா, தாமான் செரெண்டா, தாமான் பிரிமா ஆகிய வீடமைப்பு பகுதிகளை உள்ளடக்கியிருந்தது.
அந்த வீடமைப்பு பகுதிகளில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்ததைத் தொடர்ந்து அந்த பொது முடக்கத்தை அகற்ற முடிவெடுக்கப்பட்டதாக சபாக் பெர்ணம் மாவட்ட அதிகாரி அம்ரி இஸ்மாயில் கூறினார்.
அங்கு வசிக்கும் பொதுமக்கள் எஸ்.ஒபி. விதிமுறைகளை முறையாக கடைபிடித்ததோடு கட்டொழுங்குடனும் நடந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்விவகாரம் தொடர்பில் தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் இதர அரசு நிறுவனங்களுடன் செய்த மதிப்பீட்டின் அடிப்படையில் இன்றிரவுடன் பொது முடக்கத்தை அகற்ற முடிவெடுக்கப்பட்டது என்றார் அவர்.


