ஷா ஆலம், ஜூன் 11- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கடந்த ஜூன் முதல் தேதி தொடங்கி நேற்று வரை 69 கட்டுமானப் பகுதிகளை மூட சி.ஐ.டி.பி. எனப்படும் கட்டுமான தொழில்துறை மேம்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் கண்ட முதல் பத்து நாட்களில் 1.088 கட்டுமானப் பகுதிகளில் தாங்கள் சோதனை மேற்கொண்டதாக சி.ஐ.டி.பி. அறிக்கை ஒன்றில் கூறியது.
அவற்றில் 944 கட்டுமானப் பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. 75 பகுதிகளில் எஸ்.ஒ.பி. விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டன. எஞ்சிய 69 பகுதிகள் விதிமீறல் கண்டு பிடிக்கப்பட்டு பணி நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என அந்த அறிக்கை தெரிவித்தது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் கட்டுமான நிறுவனங்கள் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று தவறினால் கடும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டி வரும் என்றும் அந்த வாரியம் எச்சரித்தது.


