சபாக் பெர்ணம், ஜூன் 11- மக்களின் எதிர்காலம் கருதியே தடுப்பூசியை வாங்கும் திட்டத்தை சிலாங்கூர் அரசு மேற்கொள்கிறதே தவிர, மற்றவர்களைக் காட்டிலும் தாங்கள் ஒரு படி மேலே இருப்பதை காட்டிக் கொள்வதற்காக அல்ல என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெளிவுபடுத்தினார்.
அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த் தொற்று பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழுமத்தை உருவாக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்.
தற்போது தடுப்பூசி பெற்று வரும் தரப்பினர் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். ஆனால் பல சிறார்கள் இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவதை நாம் கண்கூடாக காண்கிறோம். ஆனாலும் அவர்கள் தடுப்பூசி பெறுவதற்கு காத்திருக்க வேண்டியவர்களாக உள்ளனர் என்றார் அவர்.
அச்சிறார்கள் குறிப்பிட்ட வயதை அடைந்து தடுப்பூசி பெறத் தயாராகும் போது நாம் தடுப்பூசிக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இளம் தலைமுறையினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தடுப்பூசியை தயார் செய்யவேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.
ஸ்ரீ செகிஞ்சான் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்கு 20 கோடி வெள்ளி ஒதுக்கப்படுவதாக மாநில அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.


