கோலாலம்பூர் ஜூன் 10- கடந்தாண்டிற்கான எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு சிறந்த அடைவு நிலையை மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டிற்கான எஸ்.பி.எம். தேர்வின் தேசிய சராசரி தர மதிப்பெண் (ஜி.பி.என்.) 4.80 ஆக பதிவாகியுள்ளத்தாக மூத்த கல்வியமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் கூறினார்.
கடந்த 2019இல் 4.86 ஆகவும் 2018இல் 4.90 ஆகவும் 2017இல் 4.90 ஆகவும் 2016இல் 5.05 ஆகவும் சராசரி தர மதிப்பெண் பதிவானதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்தாண்டில் மாணவர்கள் சிறப்பான முறையில் தேர்வை எழுதியுள்ளதை இந்த அடைவு நிலை காட்டுகிறது என்றார் அவர்.
குறைவான ஜி.பி.என். மதிப்பு மாணவர்களின் சிறப்பான அடைவு நிலையைப் பிரதிபலிக்கிறது. ஆறு பாடங்களுக்கான தேர்வை எழுத பதிவு செய்து குறைந்தது ஒரு தேர்வை எழுதிய முதன் முறையாக எஸ்.பி.எம். தேர்வு எழுதும் மாணவர்களின் அடைவு நிலையை அடிப்படையாக கொண்டு இந்த மதிப்பீடு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


