ஷா ஆலம், ஜூன் 10- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிப்பை எதிர்நோக்கியிருக்கும் சிலாங்கூரில் உள்ள மற்றுத் திறனாளிகளுக்கு ஒரு முறை வழங்க க்கூடிய 500 வெள்ளி உதவித் தொகை வழங்கப்படுவதை மிலாட் எனப்படும் மலேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான சுய வாழ்வுச் சங்கம் வரவேற்றுள்ளது.
கோவிட்-19 பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நிச்சமற்ற நிலை சுய உழைப்பின் மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற வேட்கையை கொண்டிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக மிலாட் சங்கத்தின் நிறுவனர் சியா சியு சின் கூறினார்.
அமைப்புகளில் அடைக்கலம் பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகளை விட சுயகாலில் நிற்க விரும்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த நோய்த் தொற்று பரவல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் சமூக நல இல்லங்கள் போன்ற அமைப்புகளில் அடைக்கலம் பெற்றவர்களுக்கு அரசாங்கம் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எனினும், எங்களைப் போல் தனியாக தங்கியிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு அத்தகைய உதவிகள் கிடைப்பதில்லை என்றார் அவர்.
நேற்று கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் திட்டத்தை அறிவித்த மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மாநிலத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையாக 500 வெள்ளி வழங்கப்படும் எனக் கூறியிருந்தார். இந்நோக்கத்திற்காக ஆறு லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


