ஷா ஆலம், ஜூன் 10- கோவிட்-19 இலவச பரிசோதனை இயக்கத்தின் அனுபவங்களை காணொளி மற்றும் பிரசுரங்கள் வாயிலாக பொது மக்களுடன் பகிர்ந்து கொள்ள சிலாங்கூர் அரசு தயாராக உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த இயக்கத்தை தொடக்கிய போது பொதுமக்களிடமிருந்து குறைவான ஆதரவு உள்பட பல்வேறு சவால்களை தாங்கள் எதிர் நோக்கியதாக அவர் கூறினார்.
இலவசமாக நடத்தப்படும் இந்த சோதனை இயக்கம் பல தடைகளைக் கடந்து தினசரி 1,600 பேர் வரை பங்கேற்கும் அளவுக்கு விரிவடைந்துள்ளது என்றார் அவர்.
இத்திட்டத்தின் மூலம் எங்களுக்கு கிடைத்த அனுபவம் விலை மதிப்பற்றது. அந்த அனுபவங்களை பொது மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். அதன் அடிப்படையில் காணொளி மற்றும்ம் பிரசுரங்களை தயாரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம் என்று அவர் சொன்னார்.
இந்த இயக்கம் மேற்கொள்ளப்பட்ட போது எதிர்நோக்கிய சவால்களையும் இதில் பகிர்ந்து கொள்ளவிருக்கிறோம். எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காது போனால் அல்லது நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு தெளிவான விளக்கத்தை தராது போனால் பரிசோதனை மையமே நோய்த் தொற்று பரவும் இடமாக மாறிவிடும் அபாயம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பான கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதில் சிலாங்கூர் அரசின் வியூகம் தொடர்பான நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.


