ஜெராம், ஜூன் 7- சிலாங்கூரில் முன்களப் பணியாளர்கள், நோய்த் தாக்கம் அதிகம் கொண்டவர்கள் உள்பட சுமார் ஐந்து லட்சம் பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
தடுப்பூசி பெற்றவர்களில் 238,474 பேர் முன்களப் பணியாளர்கள் என்றும் எஞ்சிய 248,013 பேர் மூத்த குடிமக்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் சொன்னார்.
அவர்கள் அனைவரும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை விரைவில் பெறுவர். அதே சமயம், தடுப்பூசி பெறுவதற்கு இன்னும் பதிந்து கொள்ளாத சிலாங்கூர்வாசிகள் விரைவில் அவ்வாறு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.
நாடு முழுவதும் 11 லட்சத்து 30 ஆயிரத்து 301 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா முன்னதாக கூறியிருந்தார்.
மொத்தம் 24 லட்சத்து 44 ஆயிரத்து 75 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக கூறிய அவர், இதன் வழி முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 74 ஆயிரத்து 376 ஆக உயர்ந்துள்ளது என்றார்.
சிலாங்கூரில் 145,972 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் அதற்கு அடுத்த நிலையில் சரவா, பேராக், கோலாலம்பூர், ஜொகூர் ஆகிய மாநிலங்கள் உள்ளன என்றார்.


