கோல சிலாங்கூர், ஜூன் 7- இம்மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என மாநில அரசு எதிர்பார்க்கிறது.
நேற்று வரை 46 சட்டமன்றத் தொகுதிகளில் இந்த பரிசோதனை இயக்கம் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 91,586 பேர் பங்கேற்று பயனடைந்துள்ளதாக சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 3,237 பேர் நோய்த் தொற்றுக்கான அறிகுறியை கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.
வரும் ஜூன் 10ஆம் தேதி வரை மேலும் எட்டு தொகுதிகளில் இந்த பரிசோதனை இயக்கத்தை நடத்தவுள்ளோம். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்திலும் அதிகமானோர் இந்த பரிசோதனையில் கலந்து கொள்வது இந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம் என்றார் அவர்.
ஜெராம் தொகுதி நிலையில் இங்குள்ள கம்போங் புக்கிட் கூச்சிங் தெங்கா சமூக மண்டபத்தில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் இம்மாதம் 10ஆம் தேதி வரை தினசரி இரு சட்டமன்றத் தொகுதிகள் வீதம் மாநிலம் முழுவதும் உள்ள 56 தொகுதிகளிலும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மாநில அரசு நடத்தி வருகிறது.


