ஷா ஆலம், ஜூன் 7- நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக தொழிற்சாலைகளுக்கு 37 குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன.
வட கிள்ளான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஓப்ஸ் கோவிட்-19 3.0 சோதனையின் போது 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலை செய்ய அனுமதித்தது, உடல் உஷ்ணத்தை சோதிக்கும் கருவியை வைத்திராதது உள்ளிட்ட குற்றங்களை அத்தொழிற்சாலைகள் புரிந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நுருள்ஹூடா முகமது சாலே கூறினார்.
நேற்றுடன் முடிவடைந்த இந்த இரண்டு நாள் சோதனையில் பல தொழிலாளர்கள் மைசெஜாத்ரா செயலியில் தங்கள் விபரங்களை பதிவு செய்யாததும் கண்டு பிடிக்கப்பட்டது என்று அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.
மைசெஜாத்ரா செயலியில் தங்களை விபரங்களைப் பதிவு செய்யாத மற்றும் முகக்கவசம் அணியாத தெரிழலாளர்களுக்கு எதிராகவும் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
1988ஆம் ஆண்டு தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு குற்றப்பதிவு வழங்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
சுங்கை காப்பார், மேரு, பண்டார் சுல்தான் சுலைமான், பண்டார் புக்கிட் ராஜா ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் கிள்ளான் நகராண்மைக் கழக அமலாக்க அதிகாரிகளும் பங்கேற்றனர்.


