ஷா ஆலம், ஜூன் 7 சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தின் வழி நோய்த் தொற்று உள்ள 3,211 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாநிலத்திலுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் 46 தொகுதிகளில் இதுவரை பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இந்த நோய் தொற்று எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கங்களில் 90,363 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 3,55 விழுக்காட்டினருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்த இயக்கத்தின் வழி 50,000 பேரிடம் சோதனை மேற்கொள்ள தொடக்கத்தில் நாங்கள் இலக்கு நிர்ணயித்திருந்தோம். எனினும், பொதுமக்களிடமிருந்து இந்த இயக்கத்திற்கு அபரிமித ஆதரவு கிடைத்துள்ளது கண்டு மகிழ்ச்சியடைகிறோம் என அவர் சொன்னார்.
மாநிலத்திலுள்ள 56 தொகுதிகளையும் உள்ளடக்கிய இந்த பரிசோதனை இயக்கம் வரும் வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது.


